QtPi  உடன்  நாங்கள்.... எப்படி இங்கே....!

    தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து நம்மை வியப்பிலாழ்த்தி விரல் நுனியில் செயல்பட வைத்துக் கொண்டிருக்கும் இன்றைய யுகத்தில் தொழில்நுட்ப அதிசயங்களைக் கையாள்வதில் மூத்தவர்களை விட இளையவர்களும்  இளையவர்களை விடக் குழந்தைகளும் வல்லவர்களே.

    பள்ளிக்குச் செல்ல வாய்ப்பில்லாத இச்சூழ்நிலையில் குழந்தைகள் தம் பெற்றோரின் அலைபேசியில் பலவற்றையும் ஆய்ந்து நோக்கித் தம் நேரத்தைக் கழிப்பது நாம் அனைவரும் கண்கூடாகப் பார்க்கும் உண்மை.  இதனையே அவர்களுக்கு உபயோகமானதாகத் திசை திருப்பவே முடியாதா எனும் என் ஏக்கத்திற்குக் கை கொடுத்து உதவியவர்கள் கல்வி 40 செயலியின் நிறுவனர் திரு. பிரேம்குமார் அவர்களும்,  காஞ்சி டிஜிட்டல் குழுவின் ஒருங்கிணைப்பாளர்  அறிவியல் ஆசிரியர் திரு. அன்பழகன் அவர்களும் தான்.

     தொலையியக்கி கார்களின் இயக்கத்திற்குக் குறியீடுகள் வடிவமைக்கும்   "PROJECT ENTHIRAN"   எனும் பயிற்சிப் பட்டறையைக்  காஞ்சி டிஜிட்டல் குழுவுக்காக QtPi  நிறுவனமும் கல்வி 40 செயலியின் அமைப்பும் கடந்த மார்ச் மாதம் ஏற்பாடு செய்திருந்தது. மாநகர் காஞ்சியிலே நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையில் 25 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  என்னுடன் எங்கள் இந்து கார்னேஷன் நடுநிலைப்பள்ளி, மதுராந்தகத்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவர்களான ரா.யுகேந்திரன் மற்றும் அ.மாதேஷ் இருவரும் கலந்துகொண்டனர்.

    கல்வி 40 செயலியின் நிறுவனர் திரு பிரேம்குமார் அவர்களின் தலைமையில், காஞ்சீபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரின் வாழ்த்துகளுடன் கடந்த 05.03.2021 அன்று துவங்கிய இந்த 2 நாள் பயிற்சியில் QtPi  குழுவினரால் தொலையியக்கிக் கார் பற்றிய விளக்கம், செயல்முறை ஆகியன மிகுந்த கனிவுடனும் அக்கறையுடனும் வழங்கப்பட்டன.

    DESI ~ D - Design,  E - Electronics,  S - Software,  I - Integration என்ற வழிமுறையில் தெளிவாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்கப்பட்டதுடன் தாமே செய்து இயக்கவும் கற்பிக்கப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டது.  இதிலிருந்து செயலியை உருவாக்க முடியும் எனச் செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

    இவை மட்டுமல்ல.  இது வரை  QtPi ல் பல முகநூல் நேரலை நிகழ்ச்சிகள் ஆங்கிலம்,  இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் வழங்கப்பட்டிருந்தாலும்  முதன்முறையாகத் தமிழில் முகநூல் நேரலை நிகழ்ச்சி மாணவர்களால் செயல்முறை விளக்கத்துடன் இடம் பெறும் வாய்ப்பும் காஞ்சி டிஜிட்டல் குழுவைச் சேர்ந்த எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  இதற்காக எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு என்னுடன் இணைந்து பயிற்சியளித்தது QtPi  குழு. இது  போன்ற குழுவின் செயல் இதுவரை நான் வேறெங்கும் கண்டிராதது.  பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் உரியது.

    ஒவ்வொரு நாளும் மாணவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டி அவர்கள் மடிக்கணினியில் குறியீடுகளைப் பதிகையில் பொறுமையுடனும் கவனமுடனும் உற்றுநோக்கி, தேவையெனில் விளக்கமளித்து தொலையியக்கி காருக்கான  செயலியை உருவாக்க  உதவிய இக்குழுவின் முயற்சியும் ஊக்கமும் அபாரம்...!

     அரசுப்பள்ளி மாணவர்கள் என்றாலே வசதி வாய்ப்புகளில் பின் தங்கியவர்களே. அவர்களிடம் கணினி வசதி,  தம் பெற்றோரின் அலைபேசியில் இத்தகைய செயலிகளை உருவாக்கும் வழிகாட்டுதல் என இதுபோன்ற எதுவும் கிடைக்காது. ஆனால் இந்த இடர்களையும் தாண்டி இவர்கள் இதனைச் செய்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம்  காஞ்சி டிஜிட்டல் டீம்  மற்றும் கல்வி 40 என்று நன்றியுடன் கூறிக்கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.

    இது மட்டுமல்ல...  இனி வரும் காலங்களிலும் இத்தகைய செயலிகளுக்கான காணொளிப் பதிவுகள்,  முகநூல் நேரலை நிகழ்ச்சிகள் என அரசுப்பள்ளி மாணவர்கள் தடைகளைத் தாண்டி நிச்சயம் மிளிர்வார்கள்.    செயலிகளால் பலவற்றையும் விரல் நுனியில் வீட்டிலிருந்தபடியே பெறும் நாம்  நம் இளைய சமுதாயத்தின் அறிவின் ஒளியால் இன்னும் வேகமாக விஞ்ஞானத் தொழில்நுட்ப வானில் சிறகடித்துப் பறப்போம் என்பதற்கு  QtPi  அடித்தளமிட்டிருக்கிறது.  அது அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்க கல்வி 40 ம் காஞ்சி டிஜிட்டல் டீமும்  பாதையமைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

                                                                                                   நன்றி!

                                                                                             ஆ.இரா.வனஜா,

                                                                                 இடைநிலை ஆசிரியை,

                                                          இந்து கார்னேஷன் நடுநிலைப்பள்ளி,

                                                                        மதுராந்தகம்.