ஸ்ரீ.ராம்பிரசாத்,                                                                                     இடைநிலை ஆசிரியர்,                                                                   ஊ.ஒ.ந.நி.பள்ளி – குருவிமலை,                                                           காஞ்சிபுரம் ஒன்றியம் & மாவட்டம்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் வியக்கதகு முன்னேற்றம் நம் நாடு அடைந்த போதிலும் அரசு பள்ளி மாணவர்களிடம்  தொழில் நுட்பம் சார்ந்த கற்பித்தல் நடைபெறுவது மிகக் குறைவு.

அவ்வாறு நடைபெற்றாலும் MS OFFICE  போன்ற சில மென்பொருள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. கற்பித்தலில் மட்டும் முழுமையாக ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புதுமையான மென்பொருள் சார்ந்த கற்றலிலும் ஈடுபட்டால் அவர்கள் மூலம் பல்வேறு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைவர் என்பதை உணர்ந்த திரு.நி.அன்பழகன்ஆசிரியர்  அவர்கள் மூலம் உருவாக்கப்பட்ட குழு காஞ்சி டிஜிட்டல் டீம் குழு.

இதில் உள்ள ஆசிரியர்களின் செயல்பாடுகளை ஆரம்ப காலகட்டத்தில் இருந்து உற்றுநோக்கி இக்குழுவில் உள்ள ஆசிரியர்களுக்கும் அவர்கள் சார்ந்த மாணவர்களுக்கும் பயிற்சி கொடுத்தால் அப்பயிற்சி அப்பள்ளியின் அனைத்து மாணவர்களையும் சென்றடையும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்ட கல்வி40 செயலியின் நிறுவனர் திரு.பிரேம்குமார் ஐயா   அவர்களின் முயற்சியால்  QtPi  நிறுவனத்தின் மூலம் கோடிங் வகுப்பு கடந்த 05-03-2021 அன்று தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வை காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் திரு.அ.ஆறுமுகம் ஐயா, மாவட்ட கல்வி அலுவலர் திரு.ஆ.எல்லப்பன் ஐயா அவர்களும், பல்வேறு ஒன்றியம் சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள்,  QtPi நிறுவனம் சார்ந்த திரு. ஜெய்சன் ஐயா  மற்றும் திரு.தினேஷ் ஐயா அவர்களால் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் 20 ஆசிரியர்கள் மற்றும் 25  மாணவர்கள் பங்குகொண்டனர்.

எப்போதும் பார்க்காத அதிசயம்!

ஆம். மாணவர்கள், ஆசிரியரான எனக்கு சொல்லி கொடுத்த அதிசயம். எந்திரன் என்பது பற்றி தெரிந்துகொள்ள பல வகுப்புகள் தேவைப்படும் என நினைத்த நான் ஒரு சில மணித்துளிகளில் என் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களான செல்வன்.மு.சஞ்சய் மற்றும் செல்வன்.ப.தீபக் ஆகிய மாணவர்கள் என்னிடம் சார் தானியங்கி மகிழுந்து  கைபேசியின் துணை கொண்டு இவ்வாறு தான் இயக்க வேண்டும் என்று என்னிடம் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

என்னையும் இந்த வகுப்பில் முழு ஈடுபாட்டுடன் கற்க இந்நிகழ்வே காரணமாய் அமைந்தது. திரு. ஜெய்சன் ஐயா மற்றும் திரு. தினேஷ் ஐயா அவர்கள்  இரண்டு நாட்கள் நேரடியாக  கொடுத்த கோடிங் பயிற்சியும் இன்றளவும் கொடுக்கும் இணைய வழி பயிற்சியும் வாழ்வில் மறக்க முடியாத ஓர் அனுபவம்.

மிக எளிதில் தனியார் பள்ளி மாணவர்களுக்கே கிடைக்காத  இந்த பயிற்சி  அரசு பள்ளி மாணவர்கள் வாழ்வில் ஒரு புது ஒளியை ஏற்றியது.

மிக எளிமையாக இவ்வகுப்பின் மூலம் கோடிங் கற்ற எம்பள்ளி மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கும் கற்பித்தனர். இணைய வழி வகுப்பில் கலந்துகொண்டு  மேலும் புதுபுது செயலிகளை உருவாக்கவும் கற்றுக்கொண்டனர். ஊ.ஒ.ந.நி.பள்ளி – களக்காட்டூர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து காணொளிகளையும் உருவாக்கினர்

இவர்களின் அடுத்த இலக்கு QtPi, youtube மற்றும் facebook தளங்களில் நேரலையில் voice control home automation (குரல் வழி இயங்கும் நேர்த்தியான இல்லம்) என்ற கோடிங் செய்துகாட்ட வேண்டும் என்பது இந்நிகழ்வும் 18 -04- 2021 அன்று நிறைவேறியது.

பல்வேறு பாராட்டுதலை பெற்ற இந்த நேரலை நிகழ்வானது தினமலர் நாளிதழ் செய்திதாளிலும் வெளியானது ஓர் மகிழ்ச்சியான தருணம்

எங்கள் பள்ளி மாணவர்களை உலகறிய செய்த காஞ்சி டிஜிட்டல் டீம் ஒருங்கிணைப்பாளர் திரு.நி.அன்பழகன் ஐயா அவர்களுக்கும், கல்வி40 நிறுவனர் திரு.பிரேம்குமார் ஐயாஅவர்களுக்கும் மற்றும் QtPi நிறுவனத்தின் திரு. ஜெய்சன் ஐயா மற்றும் திரு.தினேஷ் ஐயா அவர்களுக்கும் என் சார்பிலும், என் பள்ளியின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றி.